சென்னையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்

மழை நீரை முறையாக சேமிப்பது, பயன்படுத்திய தண்ணீரை வீணாக்காமல், முறையாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது போன்ற காரணங்களால், அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள். 

கடந்த ஒரு மாதத்துக்கு முன், போதியளவில் மழைபொழிவு இல்லாததால் மக்கள் தொகை நெரிசல் மிகுந்த சென்னையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இருந்து லாரிகள் மூலமும், வேலூரில் இருந்து ரயில் மூலமும் தண்ணீர் கொண்டுவந்து விநியோகித்து, சென்னையின் தண்ணீர் தட்டுபாட்டை போக்கியது தமிழக அரசு. ஒவ்வொருவரும் மழை நீரை முறையாக சேமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுரைகளை ஏற்காததால், இதுபோன்ற தற்காலிக தண்ணீர் பிரச்சினையை மக்கள் சந்தித்தனர். ஆனால், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பலரும், தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கவில்லை என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

சென்னை பெருநகரில் ஆண்டுக்கு 20 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்கப்படுவதாகவும், இங்கு தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, மழை நீர் சேமிப்பு திட்டம் முறையாக அமைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.  

மழை நீரை சேமிப்பது மட்டுமல்லாமல், நாள்தோறும் பயன்படுத்தும் தண்ணீரை மீண்டும் மறு சுழற்சி செய்து, கழிவறைகள், தோட்டம் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் வகையில், இன்றைய அடுக்குமாடிகள் வடிவமைக்கப்படுவதாக கூறுகின்றனர் வல்லுனர்கள்.

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், பொதுமக்களும் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும். ”நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வரிகளை வாசிப்பதோடு மற்றும் நின்றுவிடாமல், தண்ணீரை சேமிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவோம், ஒவ்வொரு ”சொட்டு நீரும் உயிர் நீர்”என்பதை உணருவோம்.

Exit mobile version