2014-ம் ஆண்டு சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு விபத்துக்குள்ளானதில், 61 பணியாளர்கள் பலியாகினர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம், விதிமீறல் காரணமாகவே கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், 50 மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடமும் பாதுகாப்பானதாக இல்லாததால், அதையும் இடிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைத்தது. இதன்படி, 2016 நவம்பரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், இடிக்கப்பட்ட கட்டிடம் அமைந்திருந்த நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட கோரி கட்டுமான நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் விதிமீறல்கள் காரணமாகவே கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இடித்ததற்கான செலவு தொகை ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே, நிலத்தை ஒப்படைக்க முடியும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.