தூத்துக்குடியில் நடைபெற்ற பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டப திறப்பு விழாவில், தாமிரபரணி, கருமேணியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டம் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணம் பகுதியில், பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் மாவட்டம் சாத்தான்குளத்தில் தீயணைப்புத் துறைக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்டப்படும் என அறிவித்தார். மேலும் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக திருச்செந்தூரில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்துபேசிய அவர், சிலரைப்போன்று இல்லாமல், சாத்தியமான திட்டங்களை மட்டுமே அறிவித்து அதிமுக அரசு நிறைவேற்றிவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பொய் வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சிலருக்கு, இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக முதலமைச்சர் சிறிய கதை வாயிலாக தெரிவித்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு தமது வாழ்வையே அர்ப்பணித்த தலைவர்கள் 99 பேரின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.