தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவித்தார். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடையும் எனவும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் டிசம்பர் 16 எனவும் தெரிவித்தார். முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தெரிவித்தார். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களின் பதவியேற்பும் முதல் கூட்டமும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும். ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர மற்றும் துணைத்தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலுக்கான கூட்டம் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை என்று மாநிலத் தேர்தல் ஆணையர் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.