கொரோனா நிவாரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனாவால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க 3 ஆயிரத்து 280 கோடி மதிப்பிலான நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும், கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறையில் நிவாரணம் வழங்கப்படும்.  மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கி கொள்ளலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிவாரணம் வழங்கப்படும், பிற மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். அம்மா உணவகங்கள் மூலம் சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும், ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதாரமான உணவு தயாரித்து வழங்கப்படும், அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு தேவையான உணவு அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்கப்படும்.  பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உடன் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்  என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் சட்டப்பேரவையில் கரவொலி எழுப்பப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு, ஒரு மாத ஊதியம், சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Exit mobile version