தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு

தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை,மதுரை,கோவை, திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. இந்தநிலையில், 15வது மாநகராட்சியாக ஆவடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சியாக மாறும் போது குடிநீர், கழிவு நீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படும். அதே நேரத்தில் சொத்து வரி, குடிநீர் வரி அதிகரிக்கும். மாநகராட்சியாக மாறும் ஆவடி, திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர், பேரூராட்சியும் இடம் பெறும். நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயப்பாக்கம், வானகரம் உள்பட 11 கிராம பஞ்சாயத்துக்கள் ஆவடி மாநகராட்சியின் கீழ் வரும். 148 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட ஆவடி மாநகராட்சியின் மக்கள் தொகை சுமார் 6 லட்சம் ஆகும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

Exit mobile version