அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேற்றப்படாத நிலையில் அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவரை கட்டுவேன் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக மக்கள் நுழைவதை தடுப்பதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.ஆனால் அவரது இந்த திட்டத்திற்கு எதிர்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 3 வாரங்களாக அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு நிதி வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் நாட்டில் அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவருக்கான நிதியை பெறுவேன் என ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை போர்க்காலங்களில் மட்டுமே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.