காலத்தை கடந்து வாழும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள்

அண்ணாவின் எழுதுகோல் குனிந்த போதெல்லாம், தமிழகம் தலைநிமிர்ந்தது. வெள்ளமென பாயும் சொற்பெருக்கும், தமிழ் செல்லமென நடைபோடும் எழுத்து நடையும் அண்ணாவின் தனிச்சொத்து.. அதனால் தான் அண்ணா ஆனார் தமிழ்நாட்டின் தனிச்சொத்து..

’நூல்களைக் கற்றதால்

நீ அறிஞனானாய்…

உன்னைக் கற்றதால்

நான் அறிஞனானேன்’ – என்று அறிஞர் அண்ணாவைப் பற்றிக் கூறினார் கவிக்கோ அப்துல் ரகுமான். அது உண்மையான கூற்று.

தமிழின் சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல், திரைக்கதை, கடிதம் – என அனைத்து வடிவங்களிலும் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்திய மாபெரும் படைப்பாளியாக அறிஞர் அண்ணா திகழ்ந்தார்.

‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ – என்ற அண்ணாவின் தொடர் தமிழில் கடித இலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. அண்ணாவின் ‘செங்கோடன் வீட்டுச் செவ்வாழை’ கதை சமூகப் பார்வையுள்ள தீவிர இயக்கியத்தின் இலக்கணமாகப் போற்றப்படுகிறது.

அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய முதல் திரைப்படம் ‘நல்லதம்பி’ ஆகும். இந்தப் படத்தில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன் அண்ணாவின் எழுத்துகளைப் போற்றி, அவருக்கு ஒரு காரை வாங்கிப் பரிசளித்தார்!பின்னர், அண்ணா எழுதிய தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் – ஆகிய சிறுகதைகள் படங்களாக எடுக்கப்பட்டன.

அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்களும் பின்னர் திரைப்படங்களாகின. இதில் 360 பக்கங்கள் கொண்ட ‘ஓர் இரவு’ படத்தின் திரைக்கதையை ஒரே இரவில் அண்ணா அவர்கள் எழுதிக் கொடுத்தார், உலகின் மிகக் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட திரைக்கதை அதுதான்.

எதை எழுதினாலும் அடித்தல், திருத்தல்களே இல்லாமல் எழுதக்கூடிய மாபெரும் வல்லமை பெற்றவராக அறிஞர் அண்ணா இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது மொழிப் புலமை வியக்கத்தக்கதாக இருந்தது. இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணாவின் ஆங்கிலத்திற்கு இணையாக ஆங்கிலம் பேசுபவர்கள் யாரும் இல்லை, ஆனாலும் அண்ணா தனது படைப்புகளை எல்லாம் தமிழுக்கே தந்து தமிழைத் தரம் உயர்த்தினார். தனது ஆரியமாயை போன்ற படைப்புகளுக்காக அவர் சிறை செல்லவும் தயங்கவில்லை.

எழுத்துகளைத் தாண்டி, ‘மேடைப் பேச்சுக்’கலையில் அண்ணாவின் பங்கு அளப்பறியது. இனிய தமிழில் எளிய உவமைகளைக் கொண்டு வலிய அரசியல் கருத்துகளை மக்கள் மத்தியில் அண்ணா பரப்பினார். ’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’, ‘மறப்போம் மன்னிப்போம்’, ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’, ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’- என்றெல்லாம் அண்ணா உருவாக்கிய வாசகங்கள் இன்றும் மேடைகளில் வாழ்ந்து வருகின்றன.

அண்ணாவின் ஆளுமையை அறிந்த உலகப் புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகம் அவருக்கு ‘சுபப் பெலோஷிப்’ என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தியது. அந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாதவர் அறிஞர் அண்ணாதான்.

தனது படைப்பாற்றல் முழுவதையும் தமிழர் முன்னேற்றத்திற்காகவும், திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே அறிஞர் அண்ணா பயன்படுத்தினார். தனது வாழ்வின் இறுதி நாட்களில், புத்தகத்தை சுமக்கக் கூட கைகளில் வலு இல்லாமல் போன சூழலில் கூட புத்தகத்தைக் கைமாற்றி கைமாற்றிப் படித்தவர் அண்ணா. அப்போதும் ‘நான் அறிந்ததை மக்களுக்குச் சொல்ல காலம் இடங்கொடுக்கவில்லையே’ – என வருந்தியவர் அண்ணா. அதனால்தான் அவரது படைப்புகள் இன்றும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன.

Exit mobile version