‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? – என்று பலர் ஆவலாகக் காத்திருந்தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’ – என்று எம்.ஜி.ஆர். அவர்களைத் தன் இதயக் கனியாகப் போற்றியவர் அண்ணா.
அறிஞர் அண்ணாவுக்குத் தனது கட்சியின் பெயரிலும், கட்சியின் கொடியிலும் இடமளித்து அவரைக் காலம் கடந்தும் மக்கள் போற்ற வழி செய்தவர் எம்.ஜி.ஆர். இருவருக்குமான பந்தம் காலங்களைக் கடந்தது.
அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். சில காரணங்களால் அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அதன் பின்னரும் அண்ணாவோடு எம்.ஜி.ஆரின் நெருக்கம் தொடர்ந்தது.
அண்ணாவின் புத்தகங்களைப் படித்தும், மேடைப் பேச்சுகளைக் கேட்டும் அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் பின்னர் தன்னை அண்ணாவின் தலைமையிலான திமுகவில் இணைத்துக் கொண்டார்.
1957ல் திமுகவுக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் முதன்முறையாகப் பிரசாரம் செய்தார். திமுக 15 இடங்களில் வென்றது. 1962ல் இரண்டாம் முறையாக திமுகவுக்காக பிரசாரம் செய்தார் திமுக 52 இடங்களில் வென்றது. அந்த ஆண்டே திமுகவின் மேலவை உறுப்பினரானார் எம்.ஜி.ஆர்.
பின்னர் 1967ஆம் ஆண்டின் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து அண்ணா முதல்வரானதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
1967-ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவின் சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்,‘‘தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’’ என்று மேடையிலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதற்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா, ‘‘எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது. ஒருமாதம் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அவர் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள் கழகத்துக்குக் கிடைக்கும்’’ என்று பேசினார்.
ஆனால்1967 ஜனவரி 12 அன்று எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட, எம்.ஜி.ஆர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் கழுத்தில் கட்டு போட்டபடி இருக்கும் புகைப்படங்கள் அன்றைய திமுகவின் சுவரொட்டிகளில் இடம்பெற்றன. இதனைப் பார்த்த மக்கள் அன்றைய திமுகவிற்கு தங்கள் வாக்குகளை வாரி வழங்கினர், அண்ணாவின் விருப்பத்தின்படி, எம்.ஜி.ஆரின் முகம் அண்ணாவின் தலைமையிலான திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையின் மையப் பகுதியான மவுண்ட் ரோட்டில் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார், பின்னர் மவுண்ட் ரோடு அண்ணா சாலையானதும் அண்ணாவின் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்றானதும் தனி வரலாறு.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான். அவரே தயாரித்து, இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ஆணும் பெண்ணும் திமுகவின் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற உருவங்களை தனது தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் சின்னமாக படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டினார் எம்.ஜி.ஆர்.
பின்னர் எம்.ஜி.ஆர் அவர்களின் பல படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றியும் விளக்கும் வசனங்களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் அவரது தொண்டர்கள் அண்ணாவின் உண்மைத் தம்பியான எம்.ஜி.ஆரின் பின்னே திரளவும், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்படவும் இருவருக்கும் இடையே இருந்த அன்பே காரணமாக இருந்தது.
அண்ணாவை நேசித்தபோதும், எம்.ஜி.ஆர். அவர்கள் பிற அறப்பெரும் தலைவர்களை மதிக்கத் தவறியதே இல்லை. 1964ஆம் ஆண்டிலேயே ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று அண்ணா முன்னிலையில் சொல்லும் துணிவும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கவே செய்தது. அதுதான் எம்.ஜி.ஆர். அவர்களின் சிறப்பம்சம்.