ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல்

ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் தயாரித்து பிரபலமடைந்த மருந்துக்கு, அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

உலகளவில் 35 லட்சத்திற்கும் அதிக உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.

அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபட்டினம் கிராமத்தை சேர்ந்த போனிகி அனந்தய்யா என்பவர், சில மூலிகைகளை கொண்டு தயாரித்த மருந்து, கொரோனா பாதிப்பை குணப்படுத்துகிறது என்ற செய்தி, காட்டுத்தீயாய் பரவியது.

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள், கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் குவிந்தனர்.

அனந்தய்யா தயாரித்த கண் சொட்டு மருந்தை போட்டுக்கொள்வதற்காக ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர்.

ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளும் குணமடைந்ததாக கூறப்பட்டதால், மருந்தை வாங்க, சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டதால், ஆந்திர அரசு, மருந்து விநியோகத்திற்கு தடை விதித்தது.

மேலும் மருந்தை ஆய்வு செய்ய ஐசிஎம்ஆரை கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், அனந்தய்யா தயாரித்துள்ள கொரோனா மருந்து விற்பனைக்கு, ஆந்திர அரசு அனுமதியளித்துள்ளது.

ஆந்திர அரசு நடத்திய ஆய்வின் மூலம் அனந்தய்யாவின் மூலிகை மருந்து பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காது என தெரிவித்து, கண் சொட்டு மருந்தை தவிர்த்து, லேகியம் உள்ளிட்ட மற்ற கொரோனா மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அனந்தய்யா மீண்டும் மருந்து தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

Exit mobile version