திருப்பதி அனந்தபூரில் ஆந்திர முன்னாள் அமைச்சர் நாராயணா மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நாராயணா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்களின் உரிமையாளரான நாராயணா தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவரும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் அனந்தபூரில் உள்ள கல்வி நிறுவனத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரது கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்து இருப்பதைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி மாணவ சங்க பிரதிநிதிகள் நாராயணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளை துன்புறுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அவ்விடத்தைவிட்டு புறப்பட்டு செல்ல முயன்ற நாராயணாவை, மாணவ சங்க பிரதிநிதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.