தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்றபோதும், தை மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த வருடத்தில் தை அமாவாசை இன்று தினத்தில் வருகிறது. இன்றைய நாளில் கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராளமானோர் தீர்த்தமாடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால், போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தை அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் அதிகாலையிலே வருகை தந்தனர்.எள், பச்சரிசி, தர்பை பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினர்.
தை அமாவாசையொட்டி தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். காலை முதல் மக்கள் திரளாக கடற்கரைக்கு வந்தனர். கடலில் புனித நீராடியவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதேபோன்று மாவட்டத்தின் கடலோர பகுதிகளான திரேஸ்புரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடல் பகுதியில் தை அமாவாசையான இன்று, ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு தமர்ப்பணம் செய்தனர். ராமேஸ்வரம் மற்றும் திருப்புல்லாணி, சேதுக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இயலாதவர்கள், மூக்கையூர் கடலில் நீராடி, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் குற்றால அருவியில் தண்ணீர் மிக குறைந்து காணப்பட்டது. இதனால் தர்ப்பணம் செய்ய வந்தோர் ஏமாற்றமடைந்தனர்.
இந்தநிலையில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், நேர்த்திக் கடன் செலுத்தவும், சுவாமி தரிசனம் செய்யவும் குவிந்தனர். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.