சென்னை அடையாற்றில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடையாற்றில் கடந்த 1962ம் ஆண்டில் கட்டப்பட்ட அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் காஞ்சி பெரியவர் வழங்கிய எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் 6வது கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வர்தா புயலுக்கு பின்னர் கோயில் கோபுரம் மற்றும் விமானம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவை செப்பனிடப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கண்டிப்பாக நல்ல மழை பெய்யும் என்று கோயிலின் அறங்காவலர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கோயிலில் பெருமாள் சயனக் கோலத்தில், யோக நித்திரையில் காட்சியளிக்கிறார். கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசம் உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அனந்த பத்மநாப சுவாமியின் அருளை பெற்றனர்.