தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலை பெறுவதற்கான தனித் தீர்மானத்தை, துணை முதலமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் கொண்டு வந்தார். இது தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் பேசினர். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மேலும் 10 ஆண்டுகள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரம், ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவத்தை தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்தில் மத்திய அரசு நீக்கியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 40 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யக் கூடாது என மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்யும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதையும் பேரவையில் துணை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.