அயல்நாட்டு உணவு, துரித உணவுகள் வருகையால் பாரம்பரிய கீரை உணவுகளை சாப்பிட இளம் தலைமுறையினர் சலிப்பு காட்டுகின்றனர். நம் உடம்பில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த கீரை வகைகளிலேயே தீர்வு உண்டு என்பதை முன்னோர்கள் நிரூபித்தும் உள்ளனர். நமக்கு தெரிந்தவையெல்லாம் அரை கீரை, சிறு கீரை, முருங்கை கீரை, பொன்னாங்கன்னி, மொலக்கீரை போன்றவைதான். ஆனால், நம் உடலில் தலை முதல் பாதம் வரையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் தீர்வு கீரைகளில் உள்ளதாக சொல்கிறார் பொறியியல் பட்டதாரியான ஸ்ரீராம்.
சென்னை நொளம்பூரில் 100-க்கும் அதிகமான கீரைகளை விற்பனை செய்து வரும் ஸ்ரீராம், இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படும் சர்க்கரை நோய்க்கு கசனி கீரை, மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முசுமுசு, மூட்ட வலியை போக்க தவசி கீரை, சிறுநீரக பிரச்னைக்கு சிலோன் பசலை கீரை, முடி வளர்ச்சிக்கு பொன்னாங்கன்னி, சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகான குப்பை மேனி கிரை என தலை முதல் கால் வரையிலான அனைத்து பிரச்னைகளுக்கும் கீரை வகைகளே தீர்வு என்கிறார்.
இன்றைய பரபரப்பான வாழ்கையில் கீரை வகைகளை சமைத்துதான் உண்ண வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றும் நமக்கு தேவையான கீரையை எதாவது ஒரு பழத்தோடு சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கவும் வழி உள்ளதாக கூறுகிறார் ஸ்ரீராம். கீரை விவசாயத்தை அதிகரிக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் உதவியுடன் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த கீரை விதைகளை கொடுத்து விவசாயம் செய்யவும் வழிவகை செய்கின்றனர் இவர்கள். நம் அன்றாட உணவில் கீரை வகைகளை சேர்ப்போம், நோய் தொற்றுகளை இந்த கீரைகள் மூலமே விரட்டுவோம்.