ஜப்பானில் வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்து தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
நாம் வாங்கும் அல்லது உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் பிரச்சனை என்றாலோ, நாம் ஆபத்தில் இருக்கும் போது உதவி செய்ய இலவச சேவை மையத்தை(customer care)-ஐ தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. சில நேரங்களில் இத்தகைய மையங்களுக்கு தேவையற்ற அழைப்புகள் வருவது வழக்கம்.
இதற்கிடையில் ஜப்பானின் சைடாமா மாகாணத்தின் கசுகபே நகரைச் சேர்ந்த 71 வயது முதியவரான அகிடோசி ஒகமோடோ ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான கே.டி.டி.ஐ யின் வாடிக்கையாளராக உள்ளார்.இவர் தான் உபயோகிக்கும் போனில் வானொலி சேவை வரவில்லை எனவும் இது நிறுவனத்தின் தவறு என கூறி பலமுறை கட்டணமில்லா இலவச customer care எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
மேலும் கே.டி.டி.ஐ தொலைத்தொடர்பு நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாகவும், அதன் ஊழியர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி தொடர்ந்து customer care எண்ணிற்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டிருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பொதுத் தொலை பேசியிலிருந்தும் அழைப்புகள் விடுத்து தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இவரது தொடர் அழைப்புகள் மூலம் மற்ற வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வர்த்தக தடை ஏற்படுத்த முயற்சி செய்ததாக அகிடோசி ஒகமோடோ கைது செய்யப்பட்டார்.
அவரது தொலைபேசி அழைப்புகளை பார்த்த போது கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 24 ஆயிரம் முறையும், கைது செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் கூட 411 முறையும் customer care எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.