“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்னும் உலக மக்களிடையே சமத்துவத்தை போதித்த வள்ளலார் பற்றிய தொகுப்பு இதோ…
உயிர்களை கொள்வது தவறு, அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்ட வேண்டும் என்று கூறிய ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் 1823ம் ஆண்டு பிறந்தார். ராமலிங்க அடிகள் 1867ம் ஆண்டு வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலை ஒன்றை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. இதன்மூலம் மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலாரின் நெறிமுறைகளை கடைப்பிடிப்போர் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார். அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். இருப்பினும் தொடர்ந்து தன் வழியிலேயே பயணப்பட்டார். பின்னர் அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவு நெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகைய உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில், அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளும், தத்துவங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன.