ஊடரங்கு காலகட்டத்தில், புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கால், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சிறப்பு பொருளாதார மாநாடுகளால் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன
அந்த வகையில் ஊரடங்கு காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக அரசு சமீபத்தில் 18 ஆயிரத்து 236 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்தப் பட்டியலில் மகாராஷ்ட்ரா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சுமார் 11 ஆயிரத்து 229 கோடி மதிப்புள்ள 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மகாராஷ்ட்ரா அரசு மேற்கொண்டுள்ளது. உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 3வது இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலம், ஊரடங்கு காலகட்டத்தில் 167 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. புரோஜக்ட்ஸ் டுடே என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், முதலீடுகள் குறித்த இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.