ஏழை எளிய மக்களின் அட்சயபாத்திரமான, ’’அம்மா’’ உணவகத்தில் சப்பாத்தி வழங்குக-அதிமுக ஒருங்கிணைப்பாளர்

அம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம், கொரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்களுக்கு அட்சயபாத்திரமாக விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறைந்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில்  ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை என்று கூறியுள்ள அவர், சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும்  மோசமாகத்தான்  இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியை காரணம் காண்பித்து ஏழைகளுக்கான இந்த திட்டத்தை படிப்படியாக நீர்த்துப் போகச் செய்வதை ஏற்றுக்  கொள்ள முடியாது என்றும் இந்தத்  திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் துவங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கண்ட செய்தியின் விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ள 

⬇⬇⬇                                              ⬇⬇⬇  

Exit mobile version