தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள அம்மா பேட்ரோல் சேவை

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அம்மா பேட்ரோல் ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்து அதற்கான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்.

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக ‘அம்மா பேட்ரோல்’ (AMMA PATROL) எனும் பெயரில் புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் சட்டங்களையும் தண்டனையையும் கடுமையாக்கி உள்ளன.

தமிழக அரசும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு அவர்களுக்கெனப் பிரத்யேகமான இலவச அழைப்பு எண்களையும், காவல்துறையினருக்கான அம்மா பேட்ரோல் ரோந்து வாகனத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் உள்ள 40 மகளிர் காவல் நிலையங்களுக்கு 35 அம்மா பேட்ரோல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். குழந்தைகளுக்கு 1098 என்ற உதவி எண்ணும், பெண்களுக்கு 1091 என்ற உதவி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் ரோந்து வாகனம் உடனடியாக அழைப்பு வந்த இடத்திற்குச் சென்று அதில் உள்ள காவலர்கள் அந்தக் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு இதைச் செயல்படுத்தியுள்ளது.

இந்த ரோந்து வாகனத்தில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, ரேடியோ உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை மிக எளிமையாகக் கண்டுபிடித்துத் தடுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் பணி மாற்ற முறையில் ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு கான்ஸ்டபிள், ஒரு ஓட்டுநர் என மூன்று பேர் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

முதற்கட்டமாகச் சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version