கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட லத்துவாடி பகுதியில், அம்மா மினி கிளினிக் திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய அவர், டிசம்பர் மாத இறுதிக்குள் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகளை திறக்க உத்தரவிட்டு அதன்படி, அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், உழைக்கும் ஏழை, எளிய உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாகவும், நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விழாவில் பேசிய முதலமைச்சர், 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆயிரத்து 650 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த ஆண்டு 435 மாணவர்கள் உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.