விடுதலைப் புலிகளின் தலைவர், உலகளாவிய தமிழர்களால் போற்றப்படும் தமிழர் மேதகு பிரபாகரன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து வணங்கிய புகைப்படம் எம்.ஜி.ஆர். அவர்களுடையது என்பதில் வெளிப்படுகிறது ஈழத் தமிழர்கள் மீதான அதிமுகவின் அக்கறை. ஈழத்துக்கும் அதிமுகவுக்குமாக அன்பின் வரலாறு மிக நீளமானது அதில், மிக முக்கியமான அத்தியாயங்களை எழுதியவர் தமிழகத்தின் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள்.எதிரிகளாலும் துரோகிகளாலும் சூழப்பட்டிருந்த ஈழத் தமிழர்களை, ஒருநாள் கூடத் தொடராத உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களால் வஞ்சிக்கப்பட்ட நம் தொப்புள்கொடி உறவுகளை, உண்மையாகவே அரவணைத்த அன்பின் கரத்திற்கு சொந்தக்காரர் அம்மா அவர்கள்தான்.
2011இல் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பின்னர் அம்மா அவர்கள், ‘போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்’ என்று குறிப்பிட்டார். அவரது உரை இலங்கையின் சிங்கள பேரினவாதிகளிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவர்கள் அம்மா மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களில் ஈடுபட்டனர். ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, ஈழத்திற்கான முழக்கத்தை அம்மா எங்கும் முழங்கினார். அதனால் தன்னை முன்னர் விமர்சித்தவர்களின் வாயாலேயே ‘ஈழத்தாய்’ என்று அழைக்கப்பட்டார். இலங்கையின் ஊடகங்கள் கூட, ‘மகிந்தவை உண்மையாகவே அச்சம் கொள்ளவைத்த இந்திய தலைவர்’ என்று அம்மாவைப் போற்றினர்.
2013இல் இலங்கையில்நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அன்றைய பிரதமர் மன்மோசிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் உலக அரங்கில் இலங்கையின் இனவெறி முகத்தைத் தோலுரித்துக் காட்டியது.
2013 மார்ச் 27ஆம் தேதி ’ஈழப் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வு’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு சட்ட சபையில் உரையாற்றினார் அன்றைய தமிழக முதலமைச்சர் அம்மா. அதில் “இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 16 2015அன்று, தமிழக சட்டசபையில் அன்றைய முதல்வர் அம்மா அவர்கள், ‘இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை’ வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில் “இலங்கை தமிழர்களின் நீண்ட நெடிய உரிமை போராட்டத்தை உருக்குலைக்கும் வண்ணம், இலங்கையில் தமிழினத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. 2009-ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.” என்றார்.
பின்னர், 2016 ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த அம்மா அவர்கள், ’ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா போன்ற அனைத்துலக அரங்கில் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்தியா செயற்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
2016ல் திருச்சி பொதுக் கூட்டத்தில், ‘வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைத்தால், தனித் தமிழ் ஈழம் அமைக்கப் பாடுபடுவேன்’ என்று மக்களுக்கு வாக்குக் கொடுத்தார் அம்மா. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் முன்னரே அம்மா அவர்கள் மறைந்தது உலகளாவிய தமிழர்கள் ஒவ்வொருவருக்குமான இழப்புதான். ஆனாலும் அம்மா மறைந்தாலும், அவர் வழியில் தொடரும் அம்மா அவர்களின் அரசு அம்மா சொன்னதை நிறைவேற்ற என்றும் பாடுபடும்.