இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன்மூலம் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளது. அதன்படி, 14நாட்கள் தனிமையில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான முழு மருத்துவ உதவிகள் வழங்கப்படும். மேலும், 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பமானி, மாத்திரைகள், 14 முகக்கவசம், கிருமி நாசினி அடங்கிய தொகுப்புகளை 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக இலவச தொடர்பு எண்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.