விவசாயிகளின் கடன்களை அடைக்கும் அமிதாப்பச்சன்

பீஹாரைச் சேர்ந்த 2,100 விவசாயிகளின் கடனை தனது சொந்தப் பணத்தில் அடைத்துவிட்டதாக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அமிதாப் பச்சன் நேற்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இதற்கு முன்னர் 2018ல் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் கடனை அடைத்த அமிதாப் பச்சன், அதற்கும் முன்னர் 2017ல் மகாராஷ்டிராவின் 350 விவசாயிகளின் கடன்களையும் அடைத்து இருந்தார்.

இது தவிர புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் தனது சார்பில் நிதியுதவிகள் வழங்கப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது, ‘ஒரு தேசம் ஒரே மக்கள் என்பதை நிரூபிக்க இதுவே சரியான சமயம். சகோதரர்களே முன்னால் வாருங்கள்… வந்து உதவி புரியுங்கள்’ – என்று டுவிட்டரில் அமிதாப் பச்சன் கோரிக்கை வைத்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.

அமிதாப் பச்சன் நடிப்பின் மூலம் வரும் தொகையில் ஒரு பகுதியை இப்படியாக சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவதும், அரசியல் ஆசையின்றி நல்ல காரியங்களுக்கு தன் ரசிகர்களைத் தூண்டுவதும் இந்தித் திரையுலகிற்கு மட்டுமில்லாமல் இந்தியத் திரையுலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

Exit mobile version