மேற்கு வங்க மாநிலத்தில், அமித் ஷாவின் ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டப்பட்டது.
அதன்படி, கூச்பெகரில், இந்த யாத்திரை இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்க அரசு இதற்கு அனுமதி மறுத்தது. அதனை எதிர்த்து பா.ஜ.க சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக் கூறிய மாநில அரசின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.