குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அமித் ஷா அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்த சவாலை ஏற்க தயார் என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமித் ஷா பேசினார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்த சட்டம் குறித்து தன்னுடன் விவாதிக்க, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி உள்ளிட்டோர் தயாரா என்று சவால் விடுத்தார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயார் என மாயாவதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து, எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விவாதிக்க, பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு விடுத்திருக்கும் சவாலை நாங்கள் ஏற்கிறோம் என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வும், இந்த சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், விவாதத்துக்கான தலைப்பாக, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டவையே இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். விவாதத்துக்கான இடம் மற்றும் நேரத்தை பாஜக முடிவு செய்யட்டும் என்றும், நான் அங்கு செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version