கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் இன்று பார்வையிட உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், கடற்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்து 61ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு 664 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளப் பாதிப்பால் மூன்றே முக்கால் லட்சம் எக்டேர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 14ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 478 கிலோமீட்டர் நீளத்துக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதலமைச்சர் எடியூரப்பாவும் ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிட உள்ளனர்.