அமெரிக்க காவல்துறையினர் தாக்கியதால் கருப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரங்களை ஒடுக்க, ராணுவத்தை பயன்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட் கிழமை, ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற குற்றவாளியை, அமெரிக்க காவல்துறையினர், பொது இடத்தில் சித்ரவதை செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. மின்னபோலிஸ் பகுதியில் கார் ஒன்றுக்கு அருகில், ஒரு காவலர் ஃபிளாயிட்டின் கழுத்திலும், மேலும் இரண்டுபேர் அவர் உடலிலும் மண்டியிட்டு அழுத்தும் காட்சிகள் வெளியானதால், ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. ஃபிளாயிட் இறந்த செய்தியை கேள்விப்பட்ட இளைஞர்கள், பொது சொத்துக்களுக்கு பயங்கர சேதத்தை ஏற்படுத்தினர். கருப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், போராட்டங்களை கட்டுப்படுத்த, ராணுவத்தினரை பயன்படுத்துமாறு, அதிபர் டிரம்ப், பாதுகாப்புத்துறை செயலருக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்ட்டகன், மின்னபோலிஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்கும்படி, ராணுவத்தினரை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பாக 1992ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற கலவரத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.