உயிருக்குப் போராடிய சிறுமியை, தேனியில் இருந்து 3 மணி நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து, கோவைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தைக்கு மூச்சு குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. கோவை மருத்துவமனைக்கு 4 மணி நேரத்திற்குள் கொண்டு சென்றால் தான் குழந்தை பிழைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுர்கள், வாட்ஸ் ஆப் குழு உதவியுடன் பயணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து காவல் துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேனியிலிருந்து கோவை செல்லும் வழி முழுவதும் சீர் செய்து ஆம்புலன்ஸ் எந்த வித தடையும் இல்லாமல் செல்ல வழி வகுத்தனர். இதன் காரணமாக 3 மணி நேரம் 10 நிமிடத்தில் கோவை மருத்துவமனையை அடைந்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அனைவரும் பாராட்டி வருகினறனர்.