அமமுகவினரின் வாகன பிரச்சார பேரணியில் பச்சிளம் குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் சிக்கியதால் குழந்தையின் பெற்றோர் பரிதவித்தது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது. அமமுக திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் S.காமராஜ் மற்றும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செங்கொடி ஆகியோர் விளமல் பகுதியில் வாக்கு சேகரித்தனர். சட்டமன்ற வேட்பாளர் காமராஜுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்த போது ஆரத்தி தட்டில் அவர் பணம் வைத்து வரவேற்பை ஏற்று கொண்டார் .
வாக்கு சேகரிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அக்கட்சியினர் பேரணியாக வலம் வந்ததால், தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து முடங்கியது. அப்போது அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கிக் கொண்டது.
நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் செல்ல வழி கிடைக்காததால் குழந்தையின் பெற்றோர் பரிதவிப்புடன் காணப்பட்டனர். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி தரப்பட்டது. ஆம்புலன்சுக்கு வழி கொடுக்காமல் பிரச்சாரம் செய்த அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.