இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த பாரத ரத்னா, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று, அவரை பற்றி நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

 

தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை மீட்டெடுத்தவர் தந்தை பெரியார் என்றால், இந்தியா முழுவதும் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர், டாக்டர் அம்பேத்கர்.

‘பாபாசாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’, 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், மத்தியபிரதேசத்தில் பிறந்தார்.

“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர், இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது இறக்கிவிடப்பட்டது, பள்ளியில் படிக்கும்போது ஒதுக்கிவிடப்பட்டது என, பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்.

ஏழை குடும்பத்தில் பிறந்து, போராடி பள்ளி படிப்பை முடித்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியால் இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார். பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன், அமெரிக்கா சென்ற அம்பேத்கர், பல்வேறு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றதோடு, சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர்’ பட்டமும் பெற்றார்.

1927ஆம் ஆண்டு ”பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து எழுதி வந்தார் அம்பேத்கர். தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராக போராடிய அவர், பொது கிணற்றில் நீர் எடுக்கும் பிரச்னை, கோவில்களில் அனுமதி மறுப்பது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தார்.

அந்த காலகட்டத்தில், இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமெனவும், டாக்டர் அம்பேத்கர் துணிச்சலாகவும், கடுமையாகவும் வலியுறுத்தியதால், நாடு முழுவதும் அவரது பெயரே எதிரொலித்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் பொறுப்பு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதில், சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளாதார அறிஞராகவும், அரசியல் தத்துவ மேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கிய டாக்டர் அம்பேத்கரின் புகழ், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version