12 ஆண்டுகளாக தமிழ் திரைப்பாடல் உலகின் சூப்பர் ஸ்டாராக பவனி வந்த நா.முத்துக்குமாரின் நினைவு நாளான இன்று அவரின் கலையுலகப் பயணத்தை நினைவுகூர்வோம்.
காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில்1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பதிலும் எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார். பட்டாம்பூச்சி விற்பவனாய் இலக்கிய வானில் சிறகு விரித்தார். இயக்குநராக ஆசைப்பட்டு வீரநடை படம் வாயிலாக பாடலாசிரியராக தடம் பதித்தார்.
அதன்பின்னர் யுவனுடன் இவர் அமைத்த கூட்டணி தமிழக இளைஞர்களை காதல்பித்து பிடிக்க வைத்தது.
இதேபோன்று ஜி.வி.பிரகாஷுடன் இவர் போட்டதும் மற்றொரு வெற்றிக் கூட்டணியே
ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், இமான், ஹாரிஸ் ஜெயராஜ் , ஜி.வி.பிரகாஷ் குமார் என அனைத்து இசையமைப்பாளர்களிடமும் குறுகிய காலத்தில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.
தங்கமீன்கள் படத்தின் “ஆனந்த யாழ்”, சைவம் படத்தின் “அழகே அழகே” ஆகிய பாடல்கள் இரண்டு தேசிய விருதுகளை நா.முத்துக்குமாருக்கு பெற்றுத் தந்தன.
திரைப்பட பாடல்களோடு அணிலாடும் முன்றில், பாலகாண்டம், வேடிக்கை பார்ப்பவன், என 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
பாடல் பிறக்கும்போது மட்டுமல்ல காற்றில் பறந்து சென்ற பிறகும் அலை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. நா.முத்துக்குமார் மறைந்தாலும் அவரின் பாடல்கள் காற்று வெளியெங்கும் நிறைந்து என்றும் அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக பாரதி கனகராஜ்…