தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரத்து 600 கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழகம் மற்றும் கர்நாடகம் எல்லைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக, சினி பால்ஸ், மெயினருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி கரையோர பகுதியில் பெய்து வரும் கன மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.10 அடியாகவும், நீர் இருப்பு 33.65 டி.எம்.சி, ஆகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 650 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.