ஜம்முவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய யாத்திரீகர்கள் குழு புறப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்டத்தில் உள்ள மலையடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவிய மழைப்பொழிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மலையடிவார முகாமில் இருந்து யாத்திரீகர்கள் புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.