திருநெல்வேலியில் சில நாட்களுக்கு முன்பு அமமுக கட்சியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அமமுக , அதிமுகவையும், இரட்டை இலையையும் அழிக்க வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும் என்றும் தி.மு.க. தான் தங்களுக்கு முதல் எதிரி என்று குறிப்பிட்டார். தற்போது இருக்கக்கூடிய முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் தங்க தமிழ்செல்வன்.
இந்த பேச்சு அவர் அமமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவே காட்டியது. மேலும் தினகரன் தரப்பில் உள்ள பல பதவி இழந்த எம்எல்ஏக்களும் தற்போது அதிருப்தியில் தான் உள்ளனர். அதில் முதல்கட்டமாக கடும் அதிருப்தியுடன் இருந்த செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். மேலும் அவர் மூலம் அவரை நம்பி இருக்கும் பலர் திமுகவில் இணைய இருப்பதாகவும் பல அமமுக பொறுப்பாளர்கள் தாய் கழகமான அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே பல திமுக உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் குக்கரில் இருந்து 2 வது விசில் 27 ஆம் தேதி வெளியேறுகிறது என்று தகவல்களை பதிவிட்டு வந்தனர். அது தங்கதமிழ்செல்வன் தான் பலரும் நினைத்துவந்தனர்.
ஆனால் டிவிட்டரில் இதை தங்கதமிழ்செல்வன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
“நான் திமுகவில் சேர இருப்பதாக திமுக தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் தகவலை பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் தியாகத்தலைவி சின்னம்மாவின் ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் தினகரன் வழியில் என் பயணம் தொடரும்.துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி ” என்று டிவிட்டரில் கதறியுள்ளார் தங்க தமிழ்செல்வன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வசனத்தை பேசியவர் தான் செந்தில்பாலாஜி இன்று திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். தங்க தமிழ்செல்வன் என்ன ஆகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என அமமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.