"தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்" போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழலில், தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இயக்கலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேவை நோக்கில் செயல்படும் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் அரசுக்கு லாபம் கிடைக்காததால், அரசுக்கு கூடுதல் சுமை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில போக்குவரத்துக் கழகம், தனியார் வாகனத்திற்கும் வாடகைக் கட்டணத்தை நிர்ணயித்து, அதை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை கடந்த ஜனவரி 9ஆம் தேதி அரசு வெளியிட்டது. இதனிடையே வாகனங்களுக்கு எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பத்தின் மூலம் “பெர்மிட்” வழங்கும் வரைவு அறிவிப்பாணை கடந்த ஜனவரி 29ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அறிவிப்பாணையை உறுதி செய்த தமிழக அரசு, அதற்காக புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழலில், தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version