மத்திய ஆயுத துணைப் படையினர், 4 மார்க்கங்களில் வான்வழிப் பயணம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு முன், மத்திய ஆயுத துணைப் படையினர் என கருதப்படுகின்ற மத்திய காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் ஆகியோர், தங்கள் அலுவல் ரீதியாகவும், விடுமுறைக் காலங்களில் வீட்டிற்குச் செல்லவும், ஜம்முவிலிருந்து வான்வழி மார்க்கமாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் அனைவரும் தரைமார்க்கமாக மட்டுமே பயணம் செய்தனர்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்குப் பின், டெல்லி முதல் ஸ்ரீநகர் வரையிலும், ஸ்ரீநகர் முதல் டெல்லி வரையிலும், ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரையிலும், ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு வரையிலும் மத்திய ஆயுத துணைப் படையினர், வான்வழி மார்க்கமாக பயணம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் 7 லட்சத்து 80 ஆயிரம் மத்திய ஆயுத துணைப் படையினர் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்திய விமானத்துறை மூலம் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.