தற்கொலைக்கு சமம் என தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு, தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து 88 நாட்களுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைத்தது. பின்னர் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து முதலமைச்சராக இருந்த மெகபூபா முப்தி பதவி விலகினார். இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தற்கொலைக்கு சமம் எனத் தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பலம் கொண்ட மோடி, பாகிஸ்தானிடமும், ஜம்மு-காஷ்மீர் மக்களிடமும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவார் என்று தங்களது கட்சி கருதியதாலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.