அகில இந்திய மருத்துவ படிப்பில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 69 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மண்டல வழக்குகளில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தும் பொருட்டு அம்மாவின் அரசு 1993ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்ளுக்கு சட்டத்தினை நிறைவேற்றியதையும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையில் கல்வி நிலையங்களில் மாணவ மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதையும் அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகம், கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் கருதப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கான வருமான உச்சவரம்பில், ஊதியம், விவசாயம் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.