கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவால், சபரிமலை கோயிலுக்கு செல்ல 594 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த பெண்ணியவாதி த்ருப்தி தேசாய், 17-ம் தேதி சபரிமலைக்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பிணராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.