பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்த, அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றிய மத்திய அரசு, இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்விலேயே அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் மத்திய அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகாவைத் தவிர அனைத்து மாநிலங்களும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஏற்கும் மாநிலங்கள் 25 சதவீத மருத்துவ இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.