மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கலந்தாலோசிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர்,
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு, புதுவை வரை பாய்ந்தோடும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, இறுதி தீர்ப்பு பெற்று தந்தவர் மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கிய நாள் தனது அரசியல் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் புரட்சி தலைவி ஜெயலலிதா தெரிவித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று தந்து விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியதாகவும் கூறி இருக்கிறார்.
காவிரி பங்கீட்டில் நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,
இதுகுறித்து தமிழக அரசு அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.