நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நாட்டில் உள்ள அமைப்பு ரீதியிலான பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கச் செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு அதிரடியாக இறங்கி உள்ளது. தனியார் பாதுகாப்பு துறையின் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பாதுகாப்பு தலைமை உச்சி மாநாட்டில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் தங்கள் சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒரேநாளில் சம்பள நாள் இருக்க வேண்டும் என்றார். இதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.