வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரும் நாளை முதல் சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மீண்டும் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளிலுள்ள 14,800 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானங்கள், அமெரிக்கா, குவைத், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், ஓமன், பக்ரைன் மற்றும் அரபு அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்காக ஏர் இந்தியா நிறுவன விமானங்களே அதிகம் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. முதல் வளைகுடா போருக்குப் பிறகான மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளவர்களிடம் 50,000 ரூபாயும், அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளவர்களிடம் 1 லட்சம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. 13 நாடுகளில் சிக்கித்தவிக்கும் 14,800க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 64 விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் நாளில், 10 விமானங்கள் மூலம் 2,300 இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 10 விமானங்களும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு தலா 7 விமானங்களும், சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூருக்கு தலா 5 விமானங்களும், கத்தாருக்கு 2 விமானங்களும் இயக்கப்பட உள்ளன.
அதேபோல, மலேசியா, வங்கதேசம், குவைத் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு தலா 5 விமானங்களும், ஓமன் மற்றும் பஹ்ரைனுக்கு தலா 2 விமானங்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மருத்துவ தேவை உள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு சிறப்பு விமானத்திலும் 200 முதல் 300 பயணிகள் வரை சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவார்கள் எனவும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் காய்ச்சல், இருமல், சர்க்கரைநோய் உள்ளிட்டவை உள்ளதா என்பது குறித்து பயணிகள் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள் எனவும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, ஐ.என்.எஸ் ஷார்துல், ஐ.என்.எஸ் மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா ஆகிய கப்பல்களும் இந்தியர்களை மீட்கும் பணிக்காக களமிறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் இந்தியர்களை மீட்டு வர அரேபிய கடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளன.
பிற மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அண்மையில் ரயில் வசதி செய்து தந்தது. தற்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.