அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடி மகளிர் இறுதிப்போட்டியில் அசத்திய ஹரியானா அணி

திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 25வது அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடி போட்டிகள் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் தெற்கு மத்திய ரயில்வே ஹைதராபாத் அணியும் எஸ்.எஸ்.பி ஹரியானா அணியும் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் 20க்கு 20 என சம புள்ளிகள் எடுத்ததால் தலா 5 ரைடுகள் கொடுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் சம புள்ளிகளை எடுத்ததால் கோல்டன் ரைடு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற எஸ்.எஸ்.பி ஹரியானா அணி 26க்கு 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் சென்னை அஞ்சல்துறை அணியும், சென்னை வருமானவரித் துறை அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை வருமான வரித் துறை அணி 31க்கு 25 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதலிடத்தை பிடித்தது.

Exit mobile version