சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் குறித்து இன்று விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள், இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தொடக்க காலத்தில் இருந்தே அனுமதி இல்லை. இதை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மிகப்பெரிய போராட்டம்  வெடித்தது. சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கூறி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராடின. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையைப்  பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இருந்தும், சபரிமலை விவகாரத்தில், 2018ம் ஆண்டு செப்டம்பரில் வழங்கிய தீர்ப்புக்கு, இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, சபரிமலை தொடர்பான வழக்குகளைத் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Exit mobile version