ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு, அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அமெரிக்க அதிபராக டொனால் டிரம்ப் பதவியேற்ற பின்னர், இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

இதனால் ஈரானின் வருவாயைக் குறைக்க நினைத்த அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.

அப்படி நிறுத்தாவிட்டால் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் கூறியது. இதனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக் கொள்வதாக இந்தியா தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. எண்ணெய் விலை உயரக்கூடாது என்ற நோக்கத்தில் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Exit mobile version