மகா தீபத்தின் போது, திருவண்ணாமலை மலை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதி சீட்டு வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறத்தில் உள்ள மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தின் போது மலை மீது ஏற, 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி சீட்டு திருவண்ணாமலை – செங்கம் சாலையில் உள்ள சண்முக தொழிற்சாலை அரசு பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்டது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனுமதி சீட்டு வாங்க, காலை முதல் பக்தர்கள் ஏராளமானோர் கூடினர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களின் நகல்களை வழங்கிய பிறகு பக்தர்களுக்கு வரிசை எண்ணுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
அனுமதி சீட்டு விரைவாக தீர்ந்துவிட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.