உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் செல்வதற்கு திட்டமிட்டிருந்த அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த ஒரு காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அகிலேஷ் யாதவ் தரப்புக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து, தனி விமானத்தை நோக்கி நடந்துச் சென்ற அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என பகுஜன் சாமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். மெகா கூட்டணியை பார்த்து பாஜக அரசு பயம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரும் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.