சென்னை பெருநகர காவல்துறைக்கு மத்திய அரசு 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 25 மற்றும் 29ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற விழாவில், மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது, போக்குவரத்து விதிமீறல்களுக்கு பணப் பரிவர்த்தனையற்ற இ-சலான் அபராத முறையை நடைமுறைப்படுத்தியது மற்றும் காவல் நிலையங்களை தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளில் சென்னை மாநகர காவல்துறைக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் உயரிய விருதுகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். சென்னைக் காவல்துறை, மக்களின் நண்பன் என்ற நம்பிக்கையை மக்களிடம் பெறுவதில் தொடர்ந்து முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக காவல்துறை இயக்குனர் திரிபாதி, சில தினங்களுக்கு முன்பு இனி காவல்துறை சார்பில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் உட்பட காவலர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டார். அதனடிப்படையில், காவல் ஆணையர் தனது பாரட்டுக் கடிதத்தை தமிழில் வெளியிட்டதுடன், அந்தக் கடிதத்தில் அவர் தமிழில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post